இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

“சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த விழாவிற்கு தமிழக கவர்னர் தலைமை தாங்கி நடத்த இருக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம்.

மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும். இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என நான் பரிந்துரைக்கிறேன். இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்.”

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here