அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் “மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு” குறித்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு, கட்சி நிர்வாகிகளுடன் விசிக தலைவர் திருமாவளவன் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதிமுகவினரும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் வலைதளத்தில் பகிரப்பட்டு விவாதப் பொருளானது.
அதில் அவர், “தமிழகத்தில் இதற்கு முன் யாரும் கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தினார்களோ, இல்லையோ; 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை விசிக உயர்த்தியது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது வேறு; தொகுதி பங்கீடு என்பது வேறு. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, 1999ல் விசிக முன்வைத்த முழக்கம்.
நான் முதன் முதலில் நெய்வேலியில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது, ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மனிதனுக்கு அதிகாரம் வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தேன். இதை சொல்கிற துணிச்சல் விசிகவுக்கு உண்டு.” என்று பேசியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விகள் எழுந்தன.
“தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறிய நிலையில், இன்று நடந்த தமிழக முதல்வர் – விசிக தலைவர் சந்திப்பு சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது.