சென்னையில் இலவச பேருந்து போக்குவரத்தை கொண்டு வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbu

காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மற்றும் பசுமைத் தாயகம் இணைந்து சென்னையில் இன்று கருத்தரங்கம் நடத்தியது. பாமக தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இன்றைய காலகட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமானது. சமீபத்த்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்தது. வரும் காலங்களிலும் இது தொடரும்.

காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மட்டும் கிடையாது, வறட்சி மற்றும் விவசாய பிரச்னைகளும் ஏற்படும். காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் மிகத் தீவிர கொள்கைகளை கொண்டு வர வேண்டும். பொது போக்குவரத்துகளை அதிகப்படுத்த வேண்டும், பூங்காக்களை அதிகமாக்க வேண்டும், பசுமை வெளிகளை அதிகமாக்க வேண்டும், மரங்கள் நடுவதை அதிகமாக்க வேண்டும், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.

ஏனெனில் வரும் காலங்களில் உணவுப் பஞ்சம் இருக்கப் போகிறது. தற்போது அரிசி விலை 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏனெனில் காலநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு குறுவை, சம்பா பயிர்கள் நான்கரை லட்சம் ஏக்கர் கருகிவிட்டன. போகப்போக இன்னும் மோசமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “காலநிலை மாற்றம் தொடர்பாக கொள்கை முடிவுகளை கொண்டு வந்துள்ளனர். அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்துகளை அதிகப்படுத்த வேண்டும். உதாரணமாக சென்னை சாலைகளில் 75 சதவிகிதம் கார்கள் தான் செல்கின்றன. ஆனால், அதில் செல்லும் மக்கள் என்னவோ 25 சதவிகிதம் பேர்தான். பேருந்தில் செல்லும் 75 சதவிகித மக்களும் மீதமுள்ள 25 சதவிகித இடத்தில்தான் செல்கிறார்கள். கார் போக்குவரத்தை குறைக்க வேண்டும். அதற்கு இலவச பொது போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

தற்போது சென்னையில் ஓடும் 3500 பேருந்துகள் என்ற எண்ணிக்கையை 8,000 பேருந்துகள் என மாற்ற வேண்டும். அப்படியென்றால் யாரும் காரிலோ பைக்கிலோ செல்ல மாட்டார்கள்.. சென்னை முழுவதும் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக ஏறி இறங்கிக் கொள்ளலாம் என்று கொண்டு வர வேண்டும்.

இதன் மூலம் காற்று மாசு, விபத்துகள் குறையும். சென்னையில் முதலில் இதனை அமல்படுத்திவிட்டு மற்ற மாநகராட்சிகளில் அடுத்தடுத்து அமல்படுத்தலாம். ஏனெனில் மாசுப் பிரச்னையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். ஏற்கனவே பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்துகள் உள்ள நிலையில், ஆண்களுக்கு இலவச பேருந்து போக்குவரத்து வேண்டும் என்று இதன்மூலம் கூறியுள்ளார் அன்புமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here