சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த புகழ்பெற்ற உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வந்த புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்று தான் உதயம் தியேட்டர். அசோக் நகரில் உள்ள இந்த தியேட்டரில் சந்திரன், உதயம், சூரியன் என மூன்று ஸ்கிரீன்களுடன் இயங்கி வந்தது. கொரோனாவுக்கு பின்னர் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை மிகவும் குறைந்தது. அதிலும் குறிப்பாக பழமையான தியேட்டர்களுக்கு செல்வதை விட மக்கள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு செல்லவே அதிகளவில் ஆர்வம் காட்டி வந்தனர்.
சென்னையின் அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்யாமல் பழையபடியே திரையிட்டு வந்தனர். இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் கம்மி ஆனது. இதனால் வேறுவழியின்றி அந்த தியேட்டர் உரிமையாளர் அதை விற்க முடிவெடுத்து, முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் இதுகுறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருக்கிறது.
உதயம் திரையரங்கை வாங்கிய கட்டுமான நிறுவனம் அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்ட உள்ளதாம். சென்னையில் சமீபகாலமாக தியேட்டர்கள் இடிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அண்மையில், சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அதேபோல் அபிராமி மெகா மாலும் இடிக்கப்பட்டு, அங்கு தியேட்டருடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது உதயம் தியேட்டரும் இணைந்துள்ளது. அசோக் நகரில் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தியேட்டர் தற்போது மூடுவிழா கண்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்படி தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் மூடப்படுவதற்கு ஓடிடி தளங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்து விடுவதால் தியேட்டரில் கூட்டம் குறைவதாக திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.