ஆண்களை போலவே பெரும்பாலான பெண்கள் உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மகளிருக்கு தனியார் சார்பில் பிரத்யேக உடற்பயிற்சிகூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பெண்களிடையே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் அதிக கட்டணம் வசூல் காரணமாக நடுத்தர மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களால் அணுக முடியாத நிலையுள்ளதால் சென்னை மாநகராட்சி சார்பில் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அனைத்து வார்டுகளிலும் அமைக்கப்படும் என நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதேபோல, மகளிருக்கு வார்டுக்கு ஒரு உடற் பயிற்சி கூடம் எனும் வீதத்தில் ‘எம்பவர் உடற்பயிற்சி கூடம்’ எனும் பெயரில் அமைக்க முதல்கட்டமாக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டு தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.