மதுரையில் நேற்று (அக். 25) மேகவெடிப்பு ஏற்பட்டதைப் போல குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதால், செல்லூர் கண்மாய், சாத்தையறு கால்வாய்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மாநகரில் சாலைகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. பல்வேறு பகுதிகளிலும் வீடுகளையும் வெள்ளம் சூழந்துள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மதுரையில் கனமழை பெய்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.10.2024) முகாம் அலுவலகத்தில், மதுரையில் கனமழை பெய்து வருவதையொட்டி, காணொலி காட்சி மூலம், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்களுடன் மழை பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here