சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். அப்போது, “நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்…” இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த பெண்கள், 3-வது வரியான, “தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்..” என்ற வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான, “தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே..” -என்று அடுத்த வரிக்கு தாவி சென்று விட்டனர். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேரடியாக இந்தியை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குவதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த திருமண விழா மேடையில் பேசிய அவர், “நான் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று நடத்தி வைக்கும் முதல் திருமணம் இது.. திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை.. மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையோடு வாழ வேண்டும். மணமக்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை இருந்தது. அண்ணா, பெரியார், கலைஞர், மு.க ஸ்டாலின் ஆகியோர் குரல் கொடுத்தனர். நானும் சொன்னேன். நான் சொல்லாததை பொய்யாக திருத்தி இந்தியாவில் பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னா சொன்னதுதான். நான் கலைஞரின் பேரன் மன்னிப்பு கேட்க மாட்டேன் . அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்தித்து கொண்டு இருக்கின்றேன்.

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நம் திராவிட மாடல் அரசு உள்ளது.1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. விடுபட்டவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பல பேர் இந்தியை திணிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றனர். நேரடியாக அது முடியவில்லை. அதனால் தமிழ் தாய் வாழ்த்தில் சில வார்த்தைகளை நீக்குகின்றனர். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர் . தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சிக்கு பல பேர் துணை போகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர். தி.மு.க.வின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here