நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது தான் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். அதனால் கோலிவுட் சந்திக்க உள்ள இழப்பு பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அவர் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டு உள்ளதாகவும், அக்கட்சியின் தலைவராக தான் செயல்படுவதாக அறிவித்திருந்தார். அதோடு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்பதையும் தனது இலக்கு 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பது தான் என அந்த அறிக்கையில் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் அரசியல் வருகை அரசியல் களத்தில் புயலை கிளப்பினாலும், சினிமா வட்டாரத்தில் ஒரு அதிருப்தியை தான் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் விஜய் தான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளது தான். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜய் தான். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக கலெக்ஷன் அள்ளிய தமிழ் படம் என்றால் அது விஜய்யின் லியோ தான். அப்படம் ரூ.148 கோடி வசூலித்தது.
பல நடிகர்களின் படங்கள் லைஃப் டைமில் கூட எட்டமுடியாத இந்த வசூலை ஒரே நாளில் எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் விஜய். இவரது படங்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனி மவுசு உண்டு. இப்படி கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வந்த விஜய் தற்போது திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விஜய். அதன்மூலம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூலும் கிடைக்கிறது. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் வாரிசு படம் ரூ.310 கோடியையும், லியோ படம் ரூ.620 கோடியையும் வசூலித்து இருந்தது. இந்த இரு படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.930 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளன.
விஜய்யின் மார்க்கெட் என்பது எகிறிக்கொண்டே செல்வதால் அவரின் அடுத்தடுத்த படங்கள் அசால்டாக ரூ.1000 கோடி வசூலை எட்டிப்பிடிக்கும் என கோலிவுட்டே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அவர் தான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது கோலிவுட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. தலைவர் ஆசையில் இப்படி தளபதியை அம்போனு விட்டுட்டு போகும் விஜய்யின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.