காங்கிரஸ், தி.மு.க., ‘இந்திய’ கூட்டணி கட்சிகள் கனவு உலகில் வாழ்கின்றன. அக்கட்சியினரின் கனவு வரும், 4ம் தேதி தகர்க்கப்படும்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
லோக்சபா தேர்தலுக்கு பின், முதல் முறையாக, தமிழக பா.ஜ., தலைவர்களின் ஆலோசனை கூட்டம், சென்னை, அமைந்தகரையில் நேற்று நடந்தது.
மத்திய அமைச்சர் முருகன், தமிழக மக்கள் கட்சி இணைத் தலைவர் சுதாகர் ரெட்டி, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: இம்முறை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெறும். நாடு முழுதும் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும். தென் மாநிலங்களில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும். தேர்தல் முடிவுக்கு பின் வடக்கு, தெற்கு என்ற வாதம் இருக்காது.
காங்கிரஸ், தி.மு.க., இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி கட்சிகள் கனவு உலகத்தில் வாழ்கின்றன. அக்கட்சியினரின் கனவு, அடுத்த மாதம் 4ம் தேதி தகர்க்கப்படும். பா.ஜ.,வினர் கொண்டாட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார். இது, காலத்தின் கட்டாயம். நாட்டை எதிர்க்கும் ஆதிக்க சக்திகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுக்கு பின் மேலே இருப்பவர்கள், கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே செல்லலாம்.
அதைப்பற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம். இனி அடுத்து கொடுக்க போகும் வேலையையும் செய்து முடிப்போம்.
எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பது முக்கியமல்ல.
எவ்வளவு ஓட்டு சதவீதம் பெறப் போகிறோம் என்பது தான் முக்கியம். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக உழைத்து தான் உயர்ந்துள்ளனர்.
அதேபோல் நாமும் உழைத்தால், நம் இலக்கை அடைய முடியும். தேர்தலில் சரிவர பணியாற்றாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். தேர்தல் முடிவுக்கு பின், அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.