தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பிச்சைக்காசு என விமர்சித்த பாஜக நிர்வாகி குஷ்புவின் உருவபொம்பையை செருப்பால் அடித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை என்கிற பெயரில் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மகளிர் வாக்கு அதிகரிக்க கூடும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், போதை பொருள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதை கண்டித்து பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டுபோட்டு விடுவார்களா? என சர்ச்சையாக கேள்வி எழுப்பியிருந்தார்.

குஷ்புவின் பேச்சுக்கு பெண்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே திமுக அமைச்சர் கீதா ஜீவன், பாஜக நிர்வாகி குஷ்புவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். நீங்கள் பெரிய நடிகர். உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். ஆனால் இந்த மாதிரி ஆயிரம் ரூபாய் வைத்துக் குடும்பம் நடத்துகிற, வாழ்வாதாரத்துக்காக, ஒரு மருத்துவச் செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக எத்தனையோ பேருக்குப் பலன் தருகிறது என தெரிவித்திருந்தார்.

இதனிடையே பாஜக நிர்வாகி குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் குஷ்புவின் உருவப்பட்டத்தை செருப்பால் அடித்தும், புகைப்படத்தை தீயிட்டு எரித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here