பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என்ற பொய் பிரசாரத்தில் திமுக ஈடுபட்டுள்ளதாக கோவை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புளியகுளம் பகுதியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணமான தொகுதி. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். மீண்டும் 3வது முறையாக பிரதமர் மோடி வருவார் என தெரிந்த தேர்தல் தான் இது. ஜூன் 4ம் தேதி அரசியல் புரட்சி ஏற்பட உழைத்து வருகிறோம்.

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என மக்களை அச்சுறுத்துகிறார்கள். திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று அறிவித்துவிட்டு தற்போது 30 சதவீதம் மகளிருக்கு மட்டுமே உரிமைத் தொகையை வழங்குகிறது. பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அந்த 30 சதவீதம் பெண்களுக்கான உரிமைத் தொகையும் மொத்தமாக நிறுத்தப்படும். ஏனென்றால், திமுக மகளிர் உரிமைத் தொகையை வைத்து திமுக நாடகமாடுகிறது. உரிமைத் தொகை என்பது நீங்கள் கொண்டு வந்த திட்டம். அதனை நாங்கள் எப்படி நிறுத்த முடியும்? அது நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்றால் ஆயிரம் ரூபாய் அல்ல, ஆயிரத்து 500 ரூபாய் வழங்குகிறோம்.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு திராவிட கட்சி மக்கள் எங்களுக்கு வாக்களித்தால், எங்கள் எம்.பி.க்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களிடம் மகளிர் உரிமைத் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தருமாறு வலியுறுத்துவோம் என்கின்றனர். மத்தியில் மோடி மீண்டும் பிரதமராவது உறுதியாகிவிட்டது. அவர் கூறும் கருத்துகளை, திட்டங்களை அப்படியே பிரதிபலிக்கும் நபர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் தான் நாம் முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். தமிழகத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் வடக்கு, தெற்கு என அரசியல் செய்யுமோ தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here