இந்துகளின் விரோதியான திமுக மட்டுமே எங்கள் அரசியல் எதிரி. அவர்களை வீழ்த்துவது தான் எங்கள் இலக்கு என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் பழனி சாலையில் ஆரிய வைசிய சபா சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையின் ஓராண்டு நிறைவு விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் இராம சீனிவாசன் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் இராம சீனிவாசன், கூறுகையில், இன்றைய சட்டமன்ற கூட்ட தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பாராளுமன்ற தொகுதி வரையறை ஆகியவற்றை எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகப் பெரிய செலவை குறைக்கும். வருடம் முழுவதும் தேர்தல் நடைபெற்று வருவதால் அரசியல் கட்சிகள் மக்கள் நலன் மீது அக்கறை கொள்ளாமல் தேர்தல் ஒன்றையே குறிக்கோளாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவது மட்டுமில்லாமல் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்ய முடியவில்லை.

சீமான் கட்சி நிர்வாகிகள் மீது NIA விசாரணை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, சட்ட விரோத பணம் பரிமாற்றம், தேச விரோத செயல்களில் இடுபடுவோரை NIA கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படைபில் தான் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் தேசபக்தர்கள் என்றால் விசாரணையில் நிரூபித்துக் காட்டட்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மட்டுமே நல்ல சூழ்நிலையில் தவறான முடிவு எடுப்பார். அதையே அவரது மகன் துரை வைகோவும் செய்து வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை இந்துக்களுக்கு விரோதமான கட்சி திமுக மட்டுமே. அவர்களது அமைச்சர்கள் அனைவரும் சனாதனத்தை ஒழிப்போம் என இந்து மதக் கொள்கைகளை விமர்சித்து இந்துக்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் அதிமுக ஒரு பொழுதும் இவ்வாறு செய்ததில்லை. தமிழகத்தில் எங்களுக்கு அரசியல் எதிரி திமுக மட்டுமே. அதனை வீழ்த்துவது தான் எங்களது இலக்கு என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here