நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சியுடன் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பாக மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது.

இதனையடுத்து அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்க பாமக, தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தான் தங்களுக்கான வாய்ப்பு என இரண்டு கட்சிகளும் தங்களுக்கான இடங்களை அதிகமாக கேட்டு டிமாண்ட் செய்து வருகிறது. மேலும் ராஜ்ய சபா சீட் வேண்டும் என விடாப்பிடியாக உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு இறுதி செய்ய முடியாமல் உள்ளது.

அதே நேரத்தில் களத்தில் முதல் ஆளாக இறங்கிய திமுக, தங்களது கூட்டணி கட்சிக்கு இன்னும் தொகுதியை ஒதுக்கீடு செய்ய முடியாமல் தவித்து வருகிறது. முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளுக்கு ஒரு தொகுதியை வழங்கியது. இதனையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்ய முடியாமல் உள்ளது. கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட தற்போது கூடுதல் இடங்கள் வேண்டும் என கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் விசிக மற்றும் மதிமுக தங்களது சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என விடாப்பிடியாக கூறி வருகின்றனர். ஆனால் திமுக தரப்போ உதய சூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இதன் காரணமாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.

இதனையடுத்து இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்படவுள்ளது. அதன் படி கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது. இதே போல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் தொகுதி பங்கீடு தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையை இரண்டு நாட்களில் முடிக்கப்படும் என தெரிகிறது. எனவே கமல்ஹாசன் அடுத்த வாரம் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்பாக தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here