சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“தீபாவளியையொட்டி 28ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு 14,086 பேருந்துகள் இயக்கப்படும். தினசரி பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுபோல நவ.2 ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிவரை 12,606 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, ஓஎம்ஆர், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிசுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தவும் இருக்கிறோம். அரசு பேருந்துகளில் எவ்வளவு கட்டணம் கொடுத்து செல்கிறீர்களோ, அதே கட்டணம் தான் வசூலிக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என இரண்டு இடங்களிலும் மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறந்திருக்கும். தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு எதுவாக, 9445014436 என்ற தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

அரசு பேருந்தின் முன்பதிவு என்பது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here