சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகம், பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் முயற்சியை தேசிய ஜனநாயக கூட்டணியினர் தடுத்து பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை வெற்றி பெற முயற்சிப்போம். இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பயந்து பின்வாங்கியுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளாக 37 எம்.பி.,க்கள் இருந்தும் தமிழக பிரச்னைகளை தி.மு.க., கூட்டணி சரி செய்ய முடிந்ததா. தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்., கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தின் முக்கியமான காவிரி பிரச்னையை தீர்க்க முடிந்ததா. மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநிலம் கூறி வருகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார்.
தமிழகத்தில் ஓட்டுக்களை வாங்க காங்.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறார் ஸ்டாலின். 40 தொகுதிகளிலும் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இது நேர்மையான வெற்றி கிடையாது.
2026 சட்டசபை தேர்தலில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. 2011 ல் தி.மு.க., மண்ணை கவ்வியதுபோன்றே, 2026 தேர்தலில் நடக்கும். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் ‘பி’ அணியாக செயல்பட்ட அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, தோல்வி பயத்தால் தான் இடைதேர்தலில் நிற்கவில்லை. தென் மாவட்ட 9 தொகுதிகளில் அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிந்துள்ளது என்றார்.