இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆவின் பால் தினசரி கொள்முதல் கடந்த மாதம் 33 லட்சம் லிட்டராக உயர்ந்தது. இது, தற்போது 35 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆவின் பால் கொள்முதல் 35.54 லட்சம் லிட்டராக இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிகபட்சமாக தினசரி பால் கொள்முதல் 35.83 லட்சம் லிட்டராக இருந்தது. பல மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால், பசும்தீவனம் அதிகரித்துள்ளது. பசு, எருமை மாடுகள் கன்றுகளை ஈன்றுள்ளன. இது, வரும் செப்டம்பர் வரை நடைபெறும். இதன் காரணமாக, பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தினசரி ஆவின் பால் கொள்முதல் மேலும் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.