“இந்தப் படத்தை எனக்குக் கொடுத்ததை பாக்கியமாக பார்க்கிறேன்” – யோகி பாபு

Priya
9 Views
4 Min Read

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.” நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, “கெணத்த காணோம்- வெறும் காமெடி வசனமாக உருவாகி தற்போது அரசியல் பேசும் வாக்கியமாக மாறி இருக்கிறது. கெணத்த காணோம் வரிசையில் ஆற்றை காணோம், ஏரியை காணோம் என இதை சுற்றிய அரசியல் ஆழமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தண்ணீர் பஞ்சம் உள்ள கிராமத்தை தேடி படக்குழு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளனர், எனினும் அதை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருக்கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்த கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை, இதுதான் தமிழ் நாடு. நான் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன், ஆனால் இத்தகைய நிலை மற்ற மாநிலங்களில் இல்லை. நடிகர் யோகி பாபுவுக்கு மண்டேலா எப்படி அரசியல் சார்ந்த அழுத்தமான படமாக அமைந்ததோ, அதேபோல் இந்தப் படமும் அவருக்கு இருக்கும் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது தெரிகிறது. படம் இயக்கும் போது ஒரு இயக்குநர் மரணிப்பது பற்றி நிறைய பேசியிருக்கிறோம், ஆனால் அதன் வலி இந்த மேடையில் உணர முடிகிறது. இயக்குநர் சுரேஷ் சங்கையா “கெணத்த காணோம்” என்ற ஆழமான படைப்பை முன்னிறுத்தி இங்கிருப்பதாகவே பார்க்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

இயக்குநர், நடிகர் கரு பழனியப்பன் பேசும் போது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு முதலில் பேசிய சில இயக்குநர்கள் படத்திற்கு தொடர்புடையவர்களுடன் நன்கு அறிமுகமானவர்கள். தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவுடன் நீண்ட நாள் பழகியவர்கள். ஆனால், எனக்கு அவரை நேற்று தான் தெரியும். ஆனால், நீண்ட காலமாக அவரைப்பற்றிய நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். தன் படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் பணியாற்றும் உதவி இயக்குநர்களைும் நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடியவர் ரமேஷ் பாபு. ஒரு இயக்குநர் இல்லாத போது, அவர் படத்தை பாராட்டி, அவரை கொண்டாடும் தயாரிப்பாளர் கிடைப்பது அரிதிலும் அரிது. அதனை சிறப்பாக செய்யும் ரமேஷ் பாபுவுக்காக இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் வசந்த பாலன் பேசும் போது, நடிகர் வடிவேலுவின் வசனம் அரசியல் கூற்றாகி இருப்பதாக தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் இன்று தமிழ் சினிமா இல்லை. அவரின் வசனங்கள் தான் இன்று அரசியல் கூற்றாக மாறி வருகிறது. சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது. அட்வைஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், ஏன் அவர்கள் கேட்க மாட்டார்கள் என்றால் ஏற்கனவே வீட்டில் சொல்வதை கேட்காமல் தான் இங்கு வந்திருக்கிறோம்,” என்றார்.

நடிகர் யோகி பாபு பேசும் போது, “அனைருக்கும் வணக்கம், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரமேஷ் சாருக்கு நன்றி. சுரேஷ் சங்கையாவை எனக்கு காக்கா முட்டை படத்தில் இருந்தே தெரியும். கிடாயின் கருணை மனு படத்தில் என்னை நடிக்க வைக்க இயக்குநர் சுரேஷ் சங்கையா திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை  கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி” என்றார்.

இந்நிகழ்வில், நடிகர் யோகி பாபு சொன்னது போல், அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு மேடையிலேயே காசோலை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply