தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை’ போன்ற தரமான படைப்புகளை கொடுத்து, ரசிகர்களின் மனங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இயக்குநர் என்ற பொறுப்பைத் தாண்டி, Grass Root Film Company என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘உதயம் என்.எச்.4’, ‘பொறியாளன்’, ‘கொடி’ உட்பட பல படங்களைத் தயாரித்துள்ளார். இருப்பினும், அவரது சமீபத்திய தயாரிப்புகளான ‘மனுஷி’ மற்றும் ‘பேட் கேர்ள்’ திரைப்படங்கள் பல்வேறு சர்ச்சைகளிலும், தனிப்பட்ட விமர்சனங்களிலும் சிக்கி அவருக்கு கடும் மன உளைச்சலைக் கொடுத்துள்ளன.
‘மனுஷி’ திரைப்படம் மாநில அரசை தவறாக சித்தரிப்பதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்புவதாகவும் விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல, ‘பேட் கேர்ள்’ குறிப்பிட்ட சமூகப் பெண்களையும், சிறுவர்களையும் தவறாகக் காட்டுவதாக எதிர்ப்பைக் கிளப்பியது. இந்த சர்ச்சைகள், படங்களை இயக்கியவர்களைத் தாண்டி, தயாரிப்பாளர் என்ற முறையில் வெற்றிமாறன் மீதும், படங்களின் டீசர்களைப் பகிர்ந்து வாழ்த்திய இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் மீதும் தனிநபர் தாக்குதல்களாக உருவெடுத்தன. இது போன்ற எதிர்பாராத விமர்சனங்கள் சினிமா வட்டாரத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.
தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினம்
வெற்றிமாறன் தயாரித்த இரண்டு படங்களும் தணிக்கை குழு மற்றும் நீதிமன்றங்களில் பல தடைகளை சந்தித்து, இறுதியில் திரைக்கு வரும் நிலையை அடைந்துள்ளன. இந்தச் சூழலில், ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வெற்றிமாறன், தயாரிப்பாளராக அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மனம் திறந்து பேசினார். “இயக்குநராக இருப்பது எளிது, ஆனால் தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினமான ஒன்று. ஒரு தயாரிப்பாளர் டீசருக்கு வரும் கமென்ட்கள் முதல் படத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இப்போது நான் பேசும்போதுகூட, இதற்கு என்ன கமென்ட் வரப்போகிறதோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் இது அனைத்தும் படத்தின் வணிகத்தை நேரடியாகப் பாதிக்கிறது. ஏற்கனவே ‘மனுஷி’ நீதிமன்றத்தில் இருந்து ஒரு வழியாகத் தற்போதுதான் வெளியிடும் நிலைக்கு வந்திருக்கிறது. ‘பேட் கேர்ள்’ படமும் மறு தணிக்கைக்கு சென்றுதான் வந்தது. டீசரைப் பார்த்தே பலரும் உணர்ச்சிவசப்பட்டு விமர்சனம் செய்தனர். ஆனால் படம் அப்படி இல்லை,” என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இனிமேல் தயாரிப்பு இல்லை!
தயாரிப்பாளராக எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பேசிய வெற்றிமாறன், “நான் ஒன்றும் பெரிய தயாரிப்பாளர் இல்லை. அங்கங்கு கடன் வாங்கி செலவு செய்யும் ஒரு சின்ன தயாரிப்பாளர்தான். இந்த அனுபவங்கள் எனக்கு அதிக மன உளைச்சலைக் கொடுத்துவிட்டன. அதனால் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். ‘பேட் கேர்ள்’ தான் எனது தயாரிப்பு நிறுவனத்தின் கடைசி படம். இதோடு என் தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறேன்,” என்று தெரிவித்தார். ஒரு படைப்பாளியாக சிறந்த படங்களை கொடுக்கும் வெற்றிமாறன், தயாரிப்பாளராக எதிர்கொண்ட கசப்பான அனுபவம், தமிழ் சினிமா உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


