வெஞ்சென்ஸ் – சினிமா விமர்சனம்

Priya
11 Views
2 Min Read

புகழும் அதிகாரமும் மனிதனை எவ்வாறு மாற்றுகிறது என்பதையும், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தின் மோதல்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ள அரசியல் த்ரில்லர் தான் இந்த படம்.

புகழை விரும்பும் தன்மையுடன் இருக்கும் அபர்ணதி, பள்ளி நாட்களிலேயே மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார். ஆனால் அந்த பாராட்டுகள் சில நாட்களில் மறைந்து விட, தொடர்ந்து பேசப்படும் நபராக இருக்க வேண்டும் என்ற ஆசை அவரை வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளுக்கு தள்ளுகிறது. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட கலெக்டராகும் அவர், அரசியல்வாதிகளின் முறைகேடுகளை எதிர்த்து கடுமையாக செயல்பட ஆரம்பிக்கிறார். இதனால் அதிகாரமும் அரசியலும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

பின்னர் பொதுத்தேர்தலுக்கான மேற்பார்வையாளராக நியமிக்கப்படும் அபர்ணதி, முன்பு தன்னை எதிர்த்த அரசியல்வாதிகளையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இறுதியில் அவர் எதிர்கொண்ட சதிகளை முறியடித்தாரா என்பது கிளைமாக்ஸில் தெரிய வருகிறது.

தைரியமான, அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் அபர்ணதி கவனம் ஈர்க்கிறார். கூர்மையான பார்வை, தன்னம்பிக்கை நிறைந்த உரையாடல் ஆகியவற்றால் கதையை முழுவதும் தாங்கி நிற்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பு தமிழகத்தின் முக்கிய பெண் அரசியல் தலைவரை நினைவுபடுத்தும் விதமாக அமைகிறது. அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படியாக இது அமையும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

முதல்வராக வரும் இளவரசு, மத்திய அமைச்சராக ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக லிவிங்ஸ்டன், முன்னாள் முதல்வராக ஒய்.ஜி. மகேந்திரன், அமைச்சராக சரவண சுப்பையா உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக சரவண சுப்பையாவின் வில்லத்தனம் சில காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு அரசியல் களத்தை இயல்பாக பதிவு செய்கிறது. கார்த்திக் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டுகின்றன.
ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து அரசியல் களத்தின் நகர்வுகளை சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராகுல் அசோக். சில இடங்களில் திரைக்கதை இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம் என்றாலும், அரசியல் சாடலும் அதிகார மோதல்களும் இணைந்த இந்த படம் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டத்துடன் முடிவடைகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply