மலையாள திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் உன்னி முகுந்தன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்கில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ‘மா வந்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், மோடியின் 75ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடி ஆகியோருக்கு இடையேயான உணர்ச்சிபூர்வமான பிணைப்பை மையமாகக்கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளது.
நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து உன்னி முகுந்தன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். “அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராகத்தான் தெரியும். அதன் பிறகு, ஏப்ரல் 2023ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு வெறும் இன்னொரு கதாபாத்திரம் அல்ல, இது ஒரு பெரிய பொறுப்பு. ஒரு எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்த ஒரு மனிதரின் கதையைச் சொல்லும் இந்தப் படத்திற்கு நான் நியாயம் செய்வேன் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய போஸ்டர்கள் வெளியீடு
இன்று நடிகர் உன்னி முகுந்தனின் பிறந்தநாளையொட்டி, ‘மா வந்தே’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் உன்னி முகுந்தன் மோடியின் பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் 2026ஆம் ஆண்டில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்ட கூட்டணியில் ‘மா வந்தே’
‘மா வந்தே’ திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக உருவாகிறது. இப்படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் கே. கே. செந்தில்குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், ரவி பஸ்ரூர் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். இந்த அனுபவமிக்க கலைஞர்களின் கூட்டணி படத்தின் தரத்தை நிச்சயம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் வார்த்தைகள் உன்னி முகுந்தனை ஊக்குவித்த விதம்
பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பின்போது, அவர் உன்னி முகுந்தனிடம் குஜராத்தி மொழியில் “ஜுக்வானு நஹி” (எப்போதும் வளைந்து கொடுக்காதே) என்று சொன்னதை உன்னி நினைவு கூர்ந்தார். “அந்த வார்த்தைகள் என்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்திருக்கின்றன” என உன்னி முகுந்தன் கூறியுள்ளார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் உன்னி முகுந்தன் நடிப்பில் மேலும் இரண்டு இந்திப் படங்களைத் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.