திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை திரிஷா, துபாயில் நடந்த விருது விழா ஒன்றில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல்ஹாசன் ஆகியோரின் புகைப்படங்கள் காட்டப்பட்டு, அவர்கள் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்க திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய் குறித்து திரிஷா
விஜய்யின் புகைப்படத்தைக் காட்டியதும், “உங்கள் புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். அவருக்கு என்ன கனவுகள் இருந்தாலும் அவை நனவாக வேண்டும், ஏனென்றால் அதற்கு அவர் முழுமையாக தகுதியானவர்” என்று கூறி விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரிஷாவும் விஜய்யும் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி, லியோ என பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர்களது காம்பினேஷன் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
அஜித்குமார் குறித்து திரிஷா
அஜித்குமார் குறித்துக் கேட்டபோது, “நான் அவருடன் பணியாற்றியபோது ஒன்றை கவனித்தேன். அவர் மிகவும் கனிவானவர், அன்பானவர். அவரது மனநிலை எப்போதும் மாறியதே இல்லை. சக நடிகர்கள் தொடங்கி, படப்பிடிப்புத் தளத்தில் உள்ள லைட்மேன் வரை அனைவரிடமும் மரியாதையாகவும், கனிவாகவும் நடந்து கொள்வார். நம்பமுடியாத அளவு கருணையுள்ளம் கொண்டவர்” எனப் பெருமிதத்துடன் கூறினார். அஜித்துடன் மங்காத்தா, கிரீடம், உன்னைத் தேடி போன்ற படங்களில் திரிஷா நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் குறித்து திரிஷா
கமல்ஹாசனின் புகைப்படத்தைப் பார்த்ததும், “கமல் சார் எப்படி இப்படி இருக்கிறீர்கள், எப்போதும் மிகவும் கவர்ச்சியாக, மிடுக்காக இருக்க எப்படி முடிகிறது? இதுதான் எல்லோரும் அவரிடம் கேட்க விரும்பும் கேள்வி என நினைக்கிறேன்” என்று சிரித்தபடியே கூறினார். கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் திரிஷா இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.


