2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான இந்தியப் படங்களில் அதிக லாபம் ஈட்டிய திரைப்படமாக சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், சுமார் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்து, தயாரிப்புச் செலவைவிட 1200 சதவிகித லாபத்தை ஈட்டியுள்ளது. இது நடப்பாண்டில் பாலிவுட் படங்களையும் கடந்து இந்திய அளவில் லாபம் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் போராட்டத்தையும், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்து வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதைமையையும் மையமாகக் கொண்டது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்தப் படத்தில் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோக லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவானாலும், அதன் வலுவான உள்ளடக்கம் மற்றும் யதார்த்தமான சித்தரிப்பு காரணமாக ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.
இந்த ஆண்டு லாபம் ஈட்டிய படங்களின் பட்டியலில் ‘டிராகன்’ திரைப்படம் 300 சதவிகித லாபத்தைப் பெற்றுள்ளது. அதே சமயம், ஒட்டுமொத்தமாக அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் விக்கி கவுஷால் நடித்த ‘ச்சாவா’ முதலிடத்தில் உள்ளது. ரூ.90 கோடியில் உருவான ‘ச்சாவா’, ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இருப்பினும், பட்ஜெட்டுக்கு ஏற்ற லாபத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிகழ்த்தியுள்ள சாதனை குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றி, குறைந்த பட்ஜெட் மற்றும் வலுவான கதைக்களத்துடன் கூடிய திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.