1990களின் எல்லைப்பகுதி இரட்டை கொலைகளை மையமாகக் கொண்ட குற்றப் புலனாய்வு திரில்லர் இது. 1995 மற்றும் 1999 ஆகிய இரு காலக்கட்டங்களில் நகரும் இந்தக் கதை, தொடக்கத்திலேயே கொடூரமான கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து கணவன்–மனைவி ஜோடிகள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். கொலையாளி வீடுகளில் வேறு எதையும் களவாடாமல், மனைவியின் தாலி மற்றும் கணவனின் அரைஞான் கயிறு மட்டும் எடுத்துச் செல்லும் விதம் வழக்கை மேலும் புதிராக்குகிறது.
இந்த வழக்கு, ஓய்வு பெற உள்ள எஸ்.ஐ. அதியமான் (சமுத்திரக்கனி) பணியாற்றும் நிலையத்திற்கு வருகிறது. காவல் துறையில் உரிய அங்கீகாரம் இன்றி புறக்கணிக்கப்பட்ட அதிகாரியாக அவர் சித்தரிக்கப்படுகிறார். வெளிப்படையான வீர வசனங்கள் இன்றி, அழுத்தத்துக்குள் இருக்கும் ஒரு சாதாரண அதிகாரியின் மனநிலையை சமுத்திரக்கனி நுட்பமாக வெளிப்படுத்துகிறார். அவருக்கு துணையாக இன்ஸ்பெக்டர் லட்சுமியாக ஷிவதா நாயர் மிடுக்கான நடிப்பை வழங்குகிறார். திரையில் அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் தொடருக்கு உறுதியான ஆதாரமாக அமைகிறது.
தமிழ்நாடு–ஆந்திர எல்லைப் பகுதிகளில் நடக்கும் இந்தக் கொலைகள் குறித்து எந்தத் தடயமும் இல்லாமல் போலீசார் திணறுகின்றனர். ஆந்திராவுக்குச் செல்லும் புலனாய்வில் இதே போன்று 76 தொடர் கொலைகள் நடந்துள்ளன என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. அதிகார வர்க்க அகங்காரம், துறைஉள் போட்டிகள் போன்றவை விசாரணைக்கு இடையூறாக இருப்பதையும் தொடர் சுட்டிக்காட்டுகிறது. டிஎஸ்பியாக வரும் மூணாறு ரமேஷ் மற்றும் அதியமான் இடையிலான மோதல்கள் இதை வலுப்படுத்துகின்றன.
வில்லன்களாக நடித்துள்ள ராஜ் திரன் தாஸ், பிரேம் ஆகியோர் உடல் மொழி மூலம் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். பழிவாங்கும் உணர்ச்சி எவ்வாறு போதையாக மாறி அப்பாவிகளை பலிகொள்கிறது என்பதையும் திரைக்கதை ஆராய்கிறது. உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டிருப்பது கூடுதல் அதிர்ச்சியை தருகிறது.
இயக்குநர் நவீன் குமார் பழனிவேல் தேவையற்ற அலங்காரங்கள் இன்றி சஸ்பென்ஸ் மிக்க காட்சிகளால் கதையை இறுக்கமாக நகர்த்தியுள்ளார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பதட்டத்தை அதிகரிக்கின்றன. பிரமாண்டம் இல்லாமல் இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் திறமையான திரில்லராக ‘தடயம்’ உருவெடுத்துள்ளது. கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இது திருப்திகரமான அனுபவமாக அமையும்.

