மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளியாகியுள்ள சாத்தான்: தி டார்க், பேராநார்மல் ஹாரர் வகையில் உருவான விறுவிறுப்பான திரைப்படம். 1950, 1977, 1999 மற்றும் 1980களின் பின்னணிகளை இணைத்து, அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் சாத்தான் வழிபாடு, மூடநம்பிக்கை மற்றும் தலைமுறை சாபம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
ஒரு பழங்குடி மக்கள் காக்கை உருவத்தில் சாத்தானை வழிபட்டு மனித பலி கொடுக்கும் சடங்கு தவறுவதால் உருவாகும் சாபம், பல ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஊரை விட்டு நீங்காத தீமையாக மாறுகிறது. இந்த சூழலில், கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் இளைஞன், தனது காதலியின் குடும்பத்துடன் தொடர்புடைய மர்மங்களை எதிர்கொள்வதும், சாத்தானின் ஆட்டத்தை தடுக்க முயல்வதும் கதையின் மையமாகிறது.
கதைப் போக்கு புதுமையானதல்ல என்றாலும், அதை சொல்லிய விதம் சுவாரஸ்யமாகவும் பதட்டமாகவும் உள்ளது. படம் தொடங்கிய சில நேரங்களில் மெல்ல உருவாகும் திகில் உணர்வு, இறுதி வரை குறையாமல் செல்கிறது. வழக்கமான ஜம்ப் ஸ்கேர்கள் அதிகமாக இல்லாமல், மனதில் ஊறும் உளவியல் பயத்தை உருவாக்கும் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. சில காட்சிகளில் காணப்படும் கொடூரமான விஷுவல்கள் மற்றும் பேராநார்மல் செயல்கள், ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்கின்றன.
தொழில்நுட்ப ரீதியாக படம் மிகுந்த வலிமையுடன் உள்ளது. தயாரிப்பு வடிவமைப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை கதைக்கு ஏற்றபடி நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒலி வடிவமைப்பு மற்றும் பின்னணி இசை இந்த படத்தின் முதன்மை பலமாக திகழ்கின்றன; ஒவ்வொரு காட்சியிலும் பயத்தை அதிகரிக்க அவை முக்கிய பங்காற்றுகின்றன.
நடிப்பில், மோனா தனது இரட்டை பரிமாணமான கதாபாத்திரத்தை சிறப்பாக சித்தரித்து படத்திற்கு வலு சேர்த்துள்ளார். நாயகன் எஃப்.ஜே மற்றும் ஐரா உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நம்பகத்தன்மை அளித்துள்ளனர்.
என்றாலும், தொடக்க வாய்ஸ் ஓவர் மற்றும் சில தர்க்க சிக்கல்கள் குறையாகத் தோன்றுகின்றன.
கிறிஸ்தவ நம்பிக்கைகளை சித்தரிக்கும் விதமும் சிலருக்கு எதிர்ப்பை ஏற்படுத்தலாம்.
மொத்தத்தில், சாத்தான்: தி டார்க் தொழில்நுட்ப ரீதியாக வலுவான, பதட்டத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கும் ஒரு தரமான ஹாரர் அனுபவமாக திகழ்கிறது.

