“சினிமாவில் கமிஷன்களை ஒழிக்க வேண்டும்” – ‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர் லெனின்

Priya
27 Views
5 Min Read

கே.ஆர்.வினோத் இயக்கத்தில், பொன்.பார்த்திபன் எழுத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நாயகியாக அஸ்மின் நடிக்க, முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசியபோது “நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன். சினிமாவிலும் அதைப் பின்பற்ற நினைத்தேன். சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரைத் தேர்வு செய்தேன். எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதை சினிமாவிலும் நான் தொடர விரும்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் போதும், நடப்பது நடக்கும். பலன் நல்லதாகவே இருக்கும். இந்தப் படத்திற்கு ஐந்து கதாநாயகிகளைப் பார்த்து ஆறாவதாகத்தான் அஸ்மின் வந்தார்.

இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. படத்தின் தலைப்பைப் பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது, பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள். அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். ஃபிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஃபிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி இணைத்தால் மிகச் சுலபமாக இந்த வேலையைச் செய்ய முடியும். பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். ஆனால், யாரும் இதைச் செய்வதில்லை . நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன் அதுவும் இலவசமாக. பேப்பர் வேலை, அலைச்சல்கள் எதுவும் தேவையில்லை. எல்லாவற்றையுமே எளிமையாகச் செய்யலாம்.

நான் முதலில் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் நடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்பதற்கு எனது இசையமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்தது, எனது எடிட்டருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்து இருக்கிறது என்பதிலேயே தெரிந்துவிடும். ஒரு படத்திற்கு நடிப்பதற்கு முக மதிப்பு உள்ளவர்கள் தேவைதான். இருந்தாலும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. நான் பணம் சம்பாதிக்க என்று இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன்.

முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்து விட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பது போல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.

நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன். ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன். இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

ஒரு சினிமாவிற்கு இசையமைப்பாளரும் எடிட்டரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரால்தான் ஒரு படத்தை நன்றாகக் கொண்டு வர முடியும். இசையமைப்பாளர் தெரிகிற அளவிற்கு எடிட்டர் வெளியே தெரிவதில்லை. இசையமைப்பாளர் அளவுக்கு எடிட்டர் கவனத்தில் வருவதில்லை. நான் நடித்தபோது முதலில் இரண்டு நாள் சுமாராகத்தான் நடித்து இருந்தேன். எனக்கே சந்தேகம் இருந்தது. படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சரிசெய்து நன்றாகப் படத்தை தொகுத்துள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.

படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம். அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.

இப்படி 2023-ல் கதை விவாதத்தில் தொடங்கி 2026-ல் வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.

சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது. ஒரு படத்திற்கு 5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது. கமிஷனாக போய்விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள். பிறகு 90 ஆயிரம் , பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது. எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது? சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.

சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால், இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான் சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும். இதை நான் விடமாட்டேன். இன்னொரு அனுபவம், ஒரு குணச்சித்திர நடிகரை அணுகியபோது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை. ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள். ஆனால், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை .

இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம். ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால்தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply