கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறும் மாணவர் தேர்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபிள்’. அந்த தேர்தலில் அராஜகமாக வெற்றி பெற எம்.எல்.ஏ மகன் பாண்டியன் முயற்சி செய்கிறார்.
அவரது அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த முன்னாள் மாணவர் தலைவர் லெனின் அழைக்கப்படுகிறார். நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முயலும் லெனின், அதே நேரத்தில் கல்லூரியில் நடைபெறும் ஒரு மர்மக் கொலையிலும் சிக்கிக் கொள்கிறார். இந்த கொலையின் பின்னணி என்ன? தேர்தல் எப்படிப் போகிறது? அரசியல் சக்திகள் எப்படி செயல்படுகின்றன என்பதே படத்தின் மையம்.
மாணவர் அரசியல், காதல், அதிகார தலையீடு, கொலை விசாரணை என பல அம்சங்களை ஒன்றிணைத்த திரைக்கதையை எழுதியுள்ள பொன். பார்த்திபன் பாராட்டுக்குரியவர். சாதாரண கல்லூரி தேர்தலாக தொடங்கும் படம், கொலைக்குப் பிறகு சஸ்பென்ஸ் த்ரில்லராக மாறுவது முக்கிய பலம். சில காட்சிகளில் மாணவர்கள் பிணத்தை மறைக்க முயலும் விதம் விறுவிறுப்பை கூட்டுகிறது.
ஆர்.வி. உதயகுமார் வில்லனாக கொங்கு தமிழில் அமைதியாகவே மிரட்டும் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அவருக்கும் அனுமோகனுக்கும் இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. லெனின் ஓரளவு நன்றாக நடித்துள்ளார். அஸ்மின் இயல்பான அழகுடன் சில இடங்களில் கவனம் ஈர்க்கிறார்.
ஆனால், மாணவர் தேர்தல், ரவுடித்தனம், அரசியல் தலையீடு போன்ற விஷயங்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்ததுபோல இருப்பது குறை. சில காட்சிகள் எழுதப்பட்ட அளவிற்கு திரையில் வலுவாக வெளிப்படவில்லை. ஒளிப்பதிவு சுமார், சில இடங்களில் நாடகத்தனம் அதிகம்.
மொத்தத்தில், புதுமை குறைந்தாலும், அரசியல்–கல்லூரி–த்ரில்லர் கலவையில் உருவான ஒரு நேர்மையான முயற்சியாக ‘ரெட் லேபிள்’ பார்க்கக் கூடிய படமாக அமைந்துள்ளது.

