சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிறை’. வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, “இந்தப் படத்தின் கதை ஆசிரியரான ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ், எங்களுடைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த வகையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்தி இதுவரையிலும் பெரிதாக தமிழ்ப்படங்கள் எதுவும் வந்ததில்லை. அந்தக் குறையை, ‘சிறை’ திரைப்படம் தீர்த்து வைக்கும். ஏனெனில், நாங்களும் இதேபோல ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். அதுதான் ‘மாநாடு’. ‘என்னுடைய பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்ற ஒற்றைக் கருப்பொருளை வைத்துதான் அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் இஸ்லாமியர் கதாபாத்திரம், கறிக்கடை பாயாகவும், சாம்பிராணி போடுபவராகவும், தீவிரவாதி போலவும் காட்டப்பட்டிருக்கிறது. இந்த எண்ண ஓட்டம், ‘சிறை’ திரைப்படம் வந்த பிறகு நிச்சயம் மாறும். சமூகப் பிரச்சனையை திரைப்படங்களில் பேசக்கூடிய மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பா. இரஞ்சித் ஆகியோரின் வரிசையில், ‘சிறை’ திரைப்படத்தின் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியும் இணைந்துவிட்டார் என நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே காட்டுகிறோம்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை

Leave a Comment
