2005–06 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த காதல் கதை, அந்த காலத்தை மட்டும் அல்லாமல், எல்லா காலத்திலும் காதலில் ஏற்படும் தவறான புரிதல்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.
படம் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளரை ஈர்க்கும் முக்கிய காரணம், இதில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதே. அதனால் கதாபாத்திரங்கள் செயற்கைத்தன்மை இன்றி இயல்பாக நம்மை அணுகுகின்றன.
காதல் குறித்த மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள் கதையின் மையம். அவர்களில் ஒருவர் கிட்டத்தட்ட காமக்கொடூரனாக சித்தரிக்கப்படுகிறார். அவனது அனுபவக் கதைகள் மற்ற நண்பர்களின் எண்ணங்களையும் விஷமாக மாற்றுகின்றன.
அந்த குழுவில் சந்தர்ப்பவசமாக ஆகாஷ் பிரபுவுக்கும் ஜானகிக்கும் நட்பு மலர்கிறது. ஜானகியின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி என்ற உண்மை வெளிவர, அந்த பின்னணியை வைத்து நண்பன் ஆகாஷை தவறான பாதைக்கு உசுப்பேற்றுகிறான். அதன் விளைவாக நிகழும் சம்பவமே கதையின் உருக்கமான கிளைமாக்ஸாக மாறுகிறது.
படத்தில் அதிகம் கவனம் ஈர்ப்பவர் ஜானகி. அவளது அப்பாவித்தனம், அப்பழுக்கற்ற காதல் பார்வையாளரின் மனதை நெகிழ வைக்கிறது. வசனம் இல்லாமல் “நீயும் இப்படிப்பட்டவன்தானா?” என்று ஒரு பார்வையில் சொல்லிவிட்டு அவள் விலகும் காட்சி படத்தின் சிறந்த தருணங்களில் ஒன்று.
ஆகாஷ் பிரபுவும் தவறு செய்து உணர்ந்து மாறும் இளைஞனாக நன்றாக நடித்துள்ளார். அவரது குடும்பக் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளன.
இயக்குனர் கே.ஜே. சுரேந்தர் தனது கதையின் மீது நம்பிக்கை வைத்து இயக்கியதுடன் தயாரித்திருப்பதும் பாராட்டத்தக்கது.
ஆனால் சில திரைக்கதை அம்சங்களில் நம்பகத்தன்மை குறைகிறது. ஒரே ஒரு சம்பவத்தில் நாயகனை நல்லவனாகவும், மற்றொரு சம்பவத்தில் தவறானவனாகவும் தீர்மானிப்பது பலவீனமாக தெரிகிறது. சில லாஜிக் ஓட்டைவிடல்களும் படத்தில் உள்ளன.
இசையமைப்பாளர் நந்தா, ஒளிப்பதிவாளர் எட்வின், எடிட்டர் வினோத் என தொழில்நுட்பக் குழுவும் புதுமுகங்களாக இருப்பது இயக்குனரின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதிக லாஜிக் பார்க்காமல் பார்த்தால், இது நம்பிக்கையூட்டும் நேர்மையான புதிய காதல் முயற்சி.

