இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ’ரமணா’, ’துப்பாக்கி’ படங்களுக்குப் பிறகு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் ’மதராஸி’. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா, சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாக உயர்ந்தாரா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டிற்குள் துப்பாக்கி கலாசாரத்தை அறிமுகப்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வித்யூத் மற்றும் சபீர் தலைமையிலான வில்லன் கும்பல் முயற்சிக்கிறது. ஐந்து கண்டெய்னர்களில் தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்ட துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விடும் அவர்களின் திட்டத்தைத் தடுக்க, என்.ஐ.ஏ அதிகாரி பிஜூ மேனன் களமிறங்குகிறார். இவர்களுக்கு இடையேயான யுத்தத்திற்குள், எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்கிறார் ஒரு இளைஞன், அதாவது ஹீரோ சிவகார்த்திகேயன்.
வில்லன்களின் துப்பாக்கி கடத்தலைத் தடுக்கச் செல்லும்போது, சிவகார்த்திகேயன் எதிரிகளிடம் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் தப்பித்தாரா, துப்பாக்கி கடத்தலின் பின்னணியில் உள்ள பெரிய தலைகள் யார், இறுதியில் என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் முக்கிய கதை.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, ஒரு புதிய பாணியில் படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். ஒருபுறம் ஆக்ஷன், மறுபுறம் எமோஷன் என இரண்டையும் கலந்துகட்டி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், சில இடங்களில் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், பல இடங்களில் லாஜிக் மீறல்கள் திரைக்கதையின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாக உள்ளன. சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதாகவும் ரசிகர்கள் உணர்கின்றனர்.
நடிப்பு என்று பார்க்கும்போது, சிவகார்த்திகேயன் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார். தான் ஏற்றுக்கொண்ட ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரத்திற்கு முடிந்தவரை தன் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். வில்லன் வித்யூத் சண்டைக் காட்சிகளில் மட்டுமே தோன்ற, ’சார்பட்டா பரம்பரை’யில் டான்ஸிங் ரோஸாக கலக்கிய சபீர், இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் சுதீப்பின் கைவண்ணத்தில் காட்சிகள் கவர்கின்றன. குறிப்பாக, இடைவேளைக் காட்சி, க்ளைமேக்ஸ் மற்றும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. அனிருத்தின் இசையில் ’சலம்பல’ பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், ஆக்ஷன் காட்சிகள் அதிகம் என்பதால், பின்னணி இசை அதிக நேரம் காதுகளை உறுத்துவதுபோல அமைந்திருக்கிறது. மொத்தத்தில், ஆக்ஷன் விரும்பிகளுக்கு இந்தப் படம் ஒரு ஓரளவு ரசிக்கக்கூடிய படமாக அமைந்தாலும், முருகதாஸின் பழைய ஃபார்முலாவை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.