“ரஜினி – கமல் இணையும் படத்தை இயக்காதது ஏன்?” – லோகேஷ் கனகராஜ் விளக்கம்

Priya
14 Views
2 Min Read

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். ஆரம்ப காலங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் 1979இல் வெளியான `நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி இணையாமல் இருந்தது.

தில்லு முல்லு' படத்தில் கமல் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது, இந்தியில் அமிதாப் பச்சனுடன் ரஜினி - கமல் இணைந்து நடித்தGeraftaar’ போன்ற படத்திற்குப் பிறகு முற்றிலுமாக இக்கூட்டணி பிரிந்தது. இந்த சூழலில் 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படத்தில் நடிக்க உள்ளனர் என்பதை அவர்களே உறுதி செய்தனர்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என சொல்லப்பட்டது, ஆனால் கூலி திரைப்படம் நினைத்த அளவு நன்றாக போகவில்லை என்ற விமர்சனம் எழுந்தபிறகு ரஜினி-கமல் படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டதாக செய்திவெளியானது. பின்னர் லோகேஷுக்கு பதில் நெல்சன் படத்தை இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் முடிவில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் ரஜினி திரைப்படம் நடிப்பதாகவும், அதனை சுந்தர் சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் திடீரென படத்திலிருந்து சுந்தர் சி விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். அவரும் இல்லையென்றால் யார் தான் படத்தை இயக்குவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் குழப்பமும் ஏற்பட்ட நிலையில், கடைசியில் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ’தலைவர் 173’ படத்தை இயக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினி படத்திலிருந்து ஏன் விலகினேன்..? லோகேஷ் விளக்கம்!
நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணையும் படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இயக்குநர் லோகேஷ் ரஜினியையும், கமல்ஹாசனையும் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் அன்ஃபால்லோவ் செய்ததாக செய்தி வெளியானது.

மேலும் அவ்விவகாரம் தொடர்பாக பல வதந்திகளில் லோகேஷ் கனகராஜின் பெயர் அடிப்பட்டது. இன்னும் பலர் லோகேஷின் இயக்குநர் எதிர்காலம் அவ்வளவுதான் எனுமளவு வதந்தியை பரப்பினர். இந்தசூழலில் தான் அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்தசூழலில் தான் செய்தியாளர் சந்திப்பை நடத்திய லோகேஷ் கனகராஜ், ரஜினி-கமல் படத்திலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், 46 வருடங்களுக்கு பிறகு ரஜினி சாரும், கமல் சாரும் இணைவதாக என்னிடம் கூறினர். அந்த வாய்ப்பை நான் இழக்க தயாராக இருக்கவில்லை, அதனால் கைதி 2 படக்குழுவினருடன் பேசிவிட்டு, ரஜினி-கமலுக்காக ஒரு கதையை எழுதி எடுத்துச்சென்று இருவரிடமும் கூறினேன். இருவருக்குமே அது பிடித்திருந்தது, ஆனால் அக்கதை ஒரு ஆக்சன் திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து ஆக்சன் திரைப்படமாக நடிக்க வேண்டாம் என்று அவர்கள் யோசித்தனர். அவர்கள் ஒரு லைட் ஹார்ட் திரைப்படத்தை எதிர்ப்பார்த்தனர், அது என்னுடைய ஜானர் கிடையாது. அதனால் தான் நான் அதிலிருந்து விலகினேன். இது சார்ந்து நிறைய வெளியில் பேசப்பட்டது, அதனால் தான் என் தரப்பிலிருந்து அதை விளக்கவேண்டும் என நினைத்தேன்’ என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply