சென்னையில் வாட்டர் பியூரிஃபையர் விற்பனை செய்து நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்தும் இளைஞராக ‘அட்டகத்தி’ தினேஷ் வருகிறார். மேட்ரிமோனி மூலம் ரேஷ்மா வெங்கடேஷை சந்திக்கும் அவர், பழக்கம் காதலாக மாறும் நிலையில், தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக ஒரு பொய் சொல்கிறார். அந்த பைக்கில் சுற்ற வேண்டும் என்ற ரேஷ்மாவின் ஆசையை நிறைவேற்ற, வேறு வழியின்றி பழைய கருப்பு பல்சர் ஒன்றை வாங்குகிறார்.
அந்த பைக்கை விற்கும் நபர் இன்னொரு வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி நடத்தும் மன்சூர் அலிகான். “யார் தலையிலாவது இந்த வண்டியை கட்டிவிட வேண்டும்” என்ற எண்ணத்தில் அவர் அதை தினேஷிடம் தள்ளிவிடுகிறார். ஆனால் அந்த பைக்கை ஓட்டத் தொடங்கிய நாளிலிருந்து தினேஷின் வாழ்க்கையில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழத் தொடங்குகின்றன. ஒருகட்டத்தில் அந்த பைக்கில் ஜல்லிக்கட்டு காளையின் ஆவி புகுந்திருப்பது தெரியவர, கதை பரபரப்பான திருப்பங்களை எடுக்கிறது. அந்த ஆவி புகுந்த பின்னணி என்ன? அந்த பைக் தினேஷிடம் வந்தது எப்படி? என்பதே மீதி கதை.
இந்த படத்தில் தினேஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒருபுறம் சென்னை வாழ்க்கைக்கு ஏற்ற எளிய இளைஞராகவும், மறுபுறம் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராகவும் தோன்றுகிறார். தங்கை மீது பாசம் காட்டும் அண்ணனாகவும் அவர் நடித்துள்ளார். இரண்டு வேடங்களிலும் ஒரே பாடிலாங்குவேஜ் வெளிப்படுவது குறையாக இருந்தாலும், அவரது யதார்த்தமான நடிப்பே படத்தின் முக்கிய பலமாக மிளிர்கிறது. ஜல்லிக்கட்டு காட்சிகளில் அவர் எடுத்த ‘ரிஸ்க்’ கவனம் ஈர்க்கிறது.
சென்னை தினேஷுக்கு ரேஷ்மா வெங்கட் ஜோடியாகவும், வீரர் தினேஷுக்கு மதுனிகா ஜோடியாகவும் நடித்துள்ளனர். இருவரும் கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பை அளித்துள்ளனர். காமெடி வில்லனாக மன்சூர் அலிகான் தெறிக்க விட்டுள்ளார். போலீஸ் அதிகாரியாக சரவண சுப்பையா, பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோரும் தங்கள் பங்குக்கு நடித்துள்ளனர்.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு இயல்பாக அமைந்து படத்துடன் ஒன்றுகிறது. இன்பாவின் இசையில் பாடல்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
வழக்கமான பேய் கதைகளிலிருந்து விலகி, பைக்கில் ஜல்லிக்கட்டு காளையின் ஆவி புகுவது போன்ற வித்தியாசமான முயற்சியால் இயக்குனர் முரளி கிரிஷ் எஸ் கவனம் ஈர்த்துள்ளார். சில காட்சிகள் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், புதுமையான கான்செப்ட் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.
கருப்பு பல்சர் – சினிமா விமர்சனம்

Leave a Comment
