குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’

Priya
44 Views
1 Min Read

பி.நாராயணன் இயக்கத்தில், இனிகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம், ‘கிகி & கொகொ’. குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படமாக உருவாகியுள்ள இதன் டீஸர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இனிகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரியான மீனா, “இந்தப் படம் எங்களுக்குப் பெருமை. ஏனென்றால், சிங்கிள் பேரண்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன், குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில், எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய ஜாலியான விஷயங்கள் இதில் உண்டு. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்குமான கதை இது” என்றார்.

“ஸ்பைடர்மேன் பறப்பது, ஹீமேன் அடிப்பது என நிஜத்தில் நடக்காத பல ஃபேண்டஸி விஷயங்களைத்தான் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறோம். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளோம். யாரையும் அடிக்கப் போவதில்லை, யாரும் பறக்கப் போவதில்லை. நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது யாருக்காவது உதவுகிறோம், சிரிக்கிறோம், நன்றியை நினைத்துப் பார்க்கிறோம், அன்பாக இருக்கிறோம். இந்த நடைமுறை விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறோம். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்தே, அவர்களின் குணம்தான். எல்லோரையும் அன்பாக வைத்திருங்கள், அன்பு உங்களுக்கு திரும்பக் கிடைக்கும்”என்றார் இயக்குநர் பி.நாராயணன்.

இசையமைப்பாளர் சி.சத்யா, “இந்தப் படத்தின் டைட்டிலே ஆங்கிலப் பாடலுக்கு இசையமைப்பது போன்ற உற்சாகத்தைக் கொடுத்தது. இந்தப் படமே எனக்கு புது அனுபவம். எந்தவிதமான மனக்கவலை இருந்தாலும், அந்த இடத்தில் குழந்தைகள் இருந்தால் எனர்ஜி கிடைக்கும். அப்படி எனக்குப் பிடித்த குழந்தைகளுக்கான படத்திற்கு இசையமைத்திருக்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply