“கதை மட்டுமல்ல, படம் வெளியாகும் சூழலும் வெற்றிக்கு காரணம்” – தயாரிப்பாளர் கே.ஜே.பாலாமணி மார்பன்

Priya
10 Views
2 Min Read

அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’.

ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தின் வெற்றி விழா, சென்னையில் நடைபெற்றது.

அதில், தயாரிப்பாளரும் நடிகருமான கே.ஜே.பாலாமணி மார்பன் பேசுகையில், ”படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள், வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன், ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.‌ படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.

படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.

இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் ‘பைவ் ஸ்டார்’ செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப் படம் மட்டும் காரணம் அல்ல அந்தப் படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம். இருப்பினும் இந்தப் படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்.. அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply