மும்பையில் பணிபுரியும் கணினி துறை இளைஞர் ஆரி அர்ஜுனன், பணி மாறுதலால் சென்னை வருகிறார். நகரின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் யாரும் வசிக்காத வீட்டில் தங்கும் அவர், தன்னை காப்பாற்றும்படி உதவி கேட்ட முன்னாள் காதலி அனுவை (பவித்ரா) தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். வீட்டில் அவளது புகைப்படத்தை காணும் அதிர்ச்சி, இரவு தோறும் வருகிற அமானுஷ்ய கனவுகள், கண்முன்னே நடக்கும் மர்ம சம்பவங்கள்—இவை அனைத்தும் ஆரியை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
ஒரு கட்டத்தில் அபார்ட்மென்டில் நிகழும் கொடூர சம்பவங்கள், பின்னர் அவை ஏற்கனவே நடந்த மரணங்களுடன் தொடர்புடையவை என்பது தெரிய வரும் திருப்பம் கதைக்கு வித்தியாசமான பரிமாணம் சேர்க்கிறது. அனு மற்றும் அவர்களின் குழந்தை என்ன ஆனார்கள்? ஏன் இந்த அமானுஷ்ய அனுபவங்கள் ஆரிக்கே மட்டும்? என்ற கேள்விகள் திரைக்கதையை முன்னோக்கி தள்ளுகின்றன.
நாயகனாக ஆரி, காதலை இழந்த துயரம், குழந்தையைச் சார்ந்த குற்ற உணர்ச்சி, உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய மனப்போராட்டம், அமானுஷ்யத்தை எதிர்கொள்ளும் அச்சம்—இவற்றை நம்பவைக்கும் வகையில் வெளிப்படுத்துகிறார். பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்து செல்லும் துப்பறியும் மனநிலையுடன் அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய பலமாக திகழ்கிறது.
பவித்ரா மற்றும் தீப்ஷிகா ஆகிய இரு நாயகிகளும் அளவான நடிப்பை வழங்கியுள்ளனர். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா முதல் பாதியில் முகபாவனைகளால் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அமானுஷ்ய அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் அவரது வில்லத்தனம் முழுமையாக எடுபடவில்லை. தலைவாசல் விஜய் உள்ளிட்ட துணை நடிகர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு தேவையான ஆதரவாக இருந்துள்ளனர்.
தரண்குமார் இசையில் பாடல்கள் கேட்கத்தக்கதாக இருந்தாலும் புதுமை குறைவு. ஆனால் பின்னணி இசை திகில் காட்சிகளில் பதட்டத்தை கூட்டுகிறது. ஒளிப்பதிவாளர் ஜெ. லக்ஷ்மண் நான்காவது தளத்தை மையமாக கொண்டு சூழலை உருவாக்க முயன்றிருக்கிறார்; இருப்பினும் சில இடங்களில் குறைந்த பட்ஜெட்டின் தாக்கம் தெரிகிறது. ராம் சுதர்ஷனின் தொகுப்பு எதிர்பார்ப்பை தக்க வைத்திருக்கிறது.
எல்.ஆர். சுந்தரபாண்டியன் இயக்கத்தில் திகில், கிரைம் திரில்லர், காதல், குடும்ப செண்டிமெண்ட் ஆகியவை கலந்த ‘ஃபோர்த் ஃப்ளோர்’ வித்தியாசமான கருவை முன்வைத்தாலும், திரைக்கதையின் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தாமல், நல்ல முயற்சியாகவே நினைவில் நிற்கிறது.

