தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழித் திரைப்படங்களிலும் கோலோச்சியவரும், ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரஸ்வதி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான பிரபல நடிகை சரோஜாதேவி, தனது 87வது வயதில் இன்று பெங்களூருவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சகாப்தமாக திகழ்ந்த சரோஜாதேவியின் அரிய பயணத்தையும், கலை உலகிற்கு அவர் அளித்த பங்களிப்பையும், அவரது சமூக சேவைகளையும் இங்கே காணலாம்.
சினிமாவில் சரோஜாதேவியின் ஆரம்பகால பயணம்
சரோஜாதேவி, 1942 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். அவரது தந்தை பைரப்பா ஒரு போலீஸ் அதிகாரியாகவும், தாய் ருத்ரம்மாவும் கலை ஆர்வம் கொண்டவராகவும் இருந்தனர். சிறு வயதிலேயே கலை ஆர்வம் கொண்ட சரோஜாதேவி, செயின்ட் தெரேசா பள்ளி, சாமராஜ்பேட்டையில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது 13வது வயதில் ஒரு பள்ளி விழாவில் பாடினார். அப்போது பிரபல கலைஞர் ஹொன்னப்பா பகவதாரால் அவரது திறமை முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. ஆரம்பத்தில், திரைப்படங்களில் நடிக்க தயங்கினாலும், அவரது தாயாரின் தூண்டுதலால் சினிமா பயணத்தைத் தொடங்கினார்.
தமிழில் ஒரு நட்சத்திரத்தின் உதயம்
சரோஜாதேவி கன்னடத் திரைப்படமான ‘மகாகவி காளிதாசா’ (1955-56) மூலம் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது. அதைத் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில், 1958 ஆம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர்-இன் ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் அறிமுகமானார். பின்னர், 1959 இல் ஸ்ரீதர் இயக்கிய ‘கல்யாணப்பரிசு’ படத்தில் நடித்தார். அன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் அடுத்தடுத்து பிஸியாக நடித்த ஒரே நடிகை சரோஜாதேவிதான். எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாகப் பொருந்தக்கூடியவர் சரோஜாதேவி. தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நடிக்கக்கூடியவர் என்று திரையுலகில் அவர் போற்றப்பட்டார்.
உச்ச நட்சத்திரங்களுடன் சரித்திரப் பதிவுகள்
சரோஜாதேவி, எம்.ஜி.ஆர் உடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசன் உடன் 22 படங்களிலும் என அதிகபட்ச படங்களில் நடித்த பெருமையைப் பெற்றவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ திரைப்படம் அவரது கடைசிப் படமாக அமைந்தது. பல்வேறு தலைமுறைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த சரோஜாதேவி, தனது நீண்ட கால திரைப் பயணத்தில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக சேவைகள்
சினிமாப் பயணத்திற்கு இடையில், 1967 ஆம் ஆண்டு பொறியாளர் ஸ்ரீ ஹர்ஷாவை சரோஜாதேவி மணந்தார். இவர்களுக்கு புவனேஸ்வரி, இந்திரா, கௌதம் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் 1986 ஆம் ஆண்டு காலமானார். தனது மறைந்த கணவர் ஸ்ரீ ஹர்ஷாவின் நினைவாக மல்லேஸ்வரமில் உள்ள க்ளூனி கான்வென்ட்டில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக வகுப்பறைகள் கட்டி நன்கொடை அளித்துள்ளார். மேலும், தனது மறைந்த கணவர் ஸ்ரீ ஹர்ஷா, மகள் புவனேஸ்வரி மற்றும் தனது தாயார் பெயரில் பல அறக்கட்டளைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களை நடத்தி, ஏராளமானோருக்கு உதவிகளைச் செய்துள்ளார். கலைத் துறையில் தனது முத்திரையைப் பதித்ததுடன், சமூகத்தின் மீதான தனது அக்கறையையும் அவர் நிரூபித்துள்ளார். சரோஜாதேவியின் மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.