நடிகர் இளவரசுவின் மகள் பிரார்த்தனாவுக்கு மறுநாள் காலை திருமணம். வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி ராமையாவின் தந்தை திடீரென காலமாகிறார். ஏற்கனவே பல ஆண்டுகளாக பகை கொண்டிருக்கும் இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே,
ஒரு வீட்டில் திருமணம்,
மற்றொரு வீட்டில் இறுதி ஊர்வலம் —
இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
“நாளை காலை 10.30 மணிக்கு என் மகள் திருமணம் இங்கே நடந்தே ஆக வேண்டும்” என இளவரசு பிடிவாதம் பிடிக்கிறார்.
அதேபோல், “என் அப்பாவின் இறுதி ஊர்வலம் மரியாதையாக நடந்தே ஆக வேண்டும்” என தம்பி ராமையாவும் முரண்டுபிடிக்கிறார். இந்த மோதலை அந்த பகுதி பஞ்சாயத்து தலைவரான ஜீவா எப்படி சமாளிக்கிறார்? கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள்? என்பதே ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் மையக்கதை.
மலையாளத்தில் ஹிட் பெற்ற ‘ஃபேலிமி’ படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ், இந்தப் படத்தையும் அதே எதார்த்த சுவையுடன் இயக்கியுள்ளார். காமெடி கலந்த ஒரு எளிய கதையை, நட்பு, காதல், கிண்டல், சண்டை, திருப்பங்கள் என பல அடுக்குகளில் சொல்லி அசத்தியிருக்கிறார் இயக்குநர். கதையில் தொடர்ந்து பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்த தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் சரியான அளவில் பயன்படுத்தி, “இந்த படத்தில் கதையே ஹீரோ; இயக்குநர்தான் ஹீரோ” என்று சொல்லும் அளவிற்கு படம் உருவாகியுள்ளது. சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ் இணைந்து எழுதிய திரைக்கதை, ஒரே இரவில் நடக்கும் கதையைக் கூட எங்கும் சலிப்பில்லாமல் கலகலவென நகர்த்துகிறது.
ஓட்டுக்காக ‘கல்யாண வீடு’ – ‘சாவு வீடு’ என இரு தரப்பினரையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஜீவா தவிக்கிறார். ஒரு பக்கம் கெஞ்சுவது, ஒரு பக்கம் கோபப்படுவது,
மறுபக்கம் சமரசம் செய்ய முயல்வது என கிடைத்த இடங்களில் எல்லாம் ஜீவா சிக்சர் அடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. காதல் இல்லை. டூயட் இல்லை. பெரிய சண்டைக்காட்சிகளும் இல்லை. ஹீரோயிசமும் இல்லை. ஆனால் கதையை முழுமையாக நம்பி நடித்ததற்கான பலன் அவருக்கு கிடைத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவாவுக்கு இது ஒரு நல்ல வெற்றி படம்.
மணமகளின் தந்தையாக இளவரசும், இறந்தவரின் மகனாக தம்பி ராமையாவும் ஈகோ காரணமாக மோதும் சண்டையே படத்தின் முக்கியமான மையம். அந்த மோதல் திரைக்கதையில் நன்றாக வேலை செய்திருக்கிறது. மணப்பெண்ணாக வரும் பிரார்த்தனாவின் நடிப்பும், அவர் எதிர்கொள்ளும் மன அழுத்தமும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, அவரது தம்பி மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ். குறிப்பாக அவர்கள் பேசும் கன்னியாகுமரி வட்டார மொழி புதுமையான சுவையை தருகிறது. ஜீவாவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக வரும் ஜென்சன் திவாகருக்கும் இடையிலான காட்சிகள் படத்தை கலகலப்பாக்குகின்றன. அவரின் உடல்மொழியும் வசன டெலிவரியும் கவனம் பெறுகிறது.
ஹீரோ – வில்லன் என்ற பிரிவே இல்லாமல், சூழ்நிலையே அனைவரையும் இயக்குவது படத்தின் மிகப் பெரிய பலம். பெரும்பாலும் ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக இறுதியில் வரும் தண்ணீர் தொட்டி காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இசை ஓகே ரகம். தேவையற்ற பில்டப் காட்சிகளோ, ஹீரோயிச சீன்களோ இல்லாதது படத்தை இன்னும் ஃப்ரெஷாக மாற்றுகிறது.
அனைத்து பிரச்னைகளும் முடிந்தபின் ஜீவா வீட்டுக்குச் செல்லும் காட்சியும், அங்கு நடக்கும் சில சம்பவங்களும் மனதில் நிற்கின்றன. பிரச்னை முடிந்துவிட்டதாக நினைக்கும் தருணத்தில் மீண்டும் பெரிதாகும் மோதல், அதனைத் தொடர்ந்து ஜீவா பேசும் டயலாக் — அனைத்தும் செம.
ஒரே நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும், நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் கலாட்டா காமெடி படமாக, பொங்கல் விருந்தாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ அமைந்துள்ளது.

