திகில் கலந்த திருப்பங்களுடன் நகரும் ஒரு மர்மக் கதைதான் இந்தப் படம்.
ரச்சிதா மகாலட்சுமி தனது காதல் கணவர் சபரியுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 66ஆம் எண் வீட்டில் குடியேறுகிறார். அங்கு 99ஆம் எண் வீட்டில் வசிப்பதாக சொல்லப்படும் ஸ்வேதா அவருக்கு முதல் தோழியாக அறிமுகமாகிறார். இருவருக்கும் விரைவில் நெருக்கமான நட்பு உருவாகிறது. ஆனால் இந்த நட்பின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருப்பதை ரச்சிதா பின்னர் உணர்கிறார்.
ஒரு பக்கம் ரச்சிதாவின் கணவர் சபரி பணத்திற்காக அவரை இயற்கையாக இறந்தது போல காட்டி கொலை செய்ய பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். மற்றொரு பக்கம் அந்தக் கட்டிடத்திற்குள் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது போல அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. கட்டிடத்தில் காரணம் தெரியாமல் தங்கி வாழும் ஒரு முதிய பெண்ணும், சித்தர் போன்று நடக்கும் ஒருவரும் மர்மத்தை மேலும் அதிகரிக்கிறார்கள்.
இதற்கிடையில், ரச்சிதா சந்தித்து வந்த ஸ்வேதா வசிக்கும் 99ஆம் எண் வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை என்பது தெரியவரும் தருணம் கதைக்கு பெரிய திருப்பமாக அமைகிறது. அப்படியானால் ரச்சிதாவை சந்தித்த ஸ்வேதா யார்? அந்த ஆத்மா ஏன் அவரைத் தேடி வருகிறது? இறுதியில் அது தனது பழியை தீர்த்துக்கொள்கிறதா? என்ற கேள்விகளுக்கு படம் பதில் அளிக்கிறது.
ரச்சிதா மகாலட்சுமி கதையின் மையமாக இருந்து கதையை தாங்கிச் செல்கிறார். காதல் கணவன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு பெண்ணாகவும், பின்னர் ஆவி புகுந்தபோது வெளிப்படும் ஆக்ரோஷமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். ஸ்வேதா கதாபாத்திரம் படத்தில் தனித்தன்மை பெற்றது. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் புத்த சிந்தனையுடன் வரும் அந்த பாத்திரம் மனதை தொடுகிறது. ஸ்வேதாவின் சிறுவயது காட்சிகளில் நடித்துள்ள கனிஷ்காவும் தெய்வீகத்தன்மையுடன் தோன்றி கவர்கிறார்.
சபரி, ரோகிந்த் ஆகியோர் தங்களது வில்லத்தனத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளனர். பவன் கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, பி.எல். தேனப்பன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்கள் கதைக்கு ஆதரவாக அமைகின்றன. சிங்கம்புலி, சாம்ஸ், முல்லை கோதண்டம் உள்ளிட்டோரின் நகைச்சுவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவு அடுக்குமாடி குடியிருப்பை பல கோணங்களில் காட்சிப்படுத்தி திகில் உணர்வை உருவாக்குகிறது. இயக்குநர் எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, இசை, பாடல்கள் என பல பொறுப்புகளை ஏற்று திகில் கதையுடன் சமூக கருத்துகளையும் இணைக்க முயன்றுள்ளார்.
முதல் பாதியில் சற்றே குழப்பம் இருந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் விளக்கங்களும் உணர்ச்சி தருணங்களும் படத்தை நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்கின்றன. மொத்தத்தில் ‘99/66’ திகிலும் மனிதநேயமும் கலந்த ஒரு முயற்சியாக நினைவில் நிற்கிறது.

