அரியலூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவ.14) இரவு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ஜெயங்கொண்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here