நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று (ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ஊர்திகளும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் குடியரசு தின கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து எவர்வின் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் முதல் பரிசும், மயிலாப்பூர் சிறுவர் தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் பரிசும், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

மேலும் கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் ராணி மேரி கல்லூரி மாணவிகள் முதல் பரிசும், கொளத்தூர் சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாம் பரிசும், குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானா லால் பட் மகளிர் கல்லூரி மாணவிகள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

இதையடுத்து அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அலங்கார ஊர்தி முதல் பரிசும், காவல்துறை ஊர்தி இரண்டாம் பரிசும், இந்து சமய அறநிலையத்துறை மூன்றாம் பரிசும் பெற்றனர். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரிசு பெற்ற அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசு உயர் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here