தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 3-ஆவது நாளாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி, திட்டங்குளம், மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூர், இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், நெல்லை, கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் என 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.