விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) அறிவித்து, கட்சியின் கொடியை வெளியிட்டபோது, அது தமிழ்நாட்டு அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘தளபதி‘ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், திரை நாயகனிலிருந்து அரசியல் களத்திற்கு வருவது வெறும் தொழில் மாற்றம் அல்ல; மாறாக, மாநில அரசியல் ஒரு மாற்றத்திற்குத் தயாராக இருக்கும் வேளையில் மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கிடப்பட்ட பாய்ச்சல் இது. ஆனால், இந்த நட்சத்திர அந்தஸ்து, உண்மையான அரசியல் சக்தியாக மாறுமா? அல்லது ரசிகர் மன்றங்களிலிருந்து கட்சியாக மாறி, காலப்போக்கில் காணாமல் போனவற்றின் பட்டியலில் TVK யும் சேர்ந்துவிடுமா? கள நிலவரத்தை அலசி ஆராய்வோம்.
விஜய்யின் எழுச்சி: மற்றுமொரு நாயகன் அல்ல
பொது மக்களின் செல்வாக்கைப் பொருத்தவரை விஜய் புதியவர் அல்ல. அவரது பாக்ஸ் ஆபிஸ் வெற்றி, தீவிர இளைஞர் பட்டாளம் அவரை எப்போதும் தனியாக அடையாளப்படுத்துகின்றன. ஆனால், திரையுலகில் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க அரசியலில் ஈடுபட்ட மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துவது அவரது காலமும் அர்ப்பணிப்பும்தான்.
ரஜினிகாந்த் அழுத்தங்களால் பின்வாங்கினார்; கமல்ஹாசனின் அறிவுபூர்வமான அணுகுமுறை, வாக்குகளாக மாறவில்லை; விஜயகாந்த்தின் ஆரம்பகால எழுச்சி பின்னர் தளர்ந்தது. இவர்களிலிருந்து வேறுபட்டு, விஜய் தனது புகழின் உச்சத்தில் அரசியலில் நுழைந்துள்ளார். மேலும், ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது பொழுதுபோக்கு அல்ல, போர்!
ஆரம்பத் தடுமாற்றங்களும் எதிர்கால சவால்களும்
கட்சியை அறிவித்தபோது ஏற்பட்ட எழுத்துப் பிழை, கொடியின் குறியீடு குறித்த தெளிவின்மை ஆகியவை அவரது கட்சிக்குள் இருக்கும் உள்மட்டத்தினரின் திறமை குறித்து கேள்விகளை எழுப்பின. இவை தவிர்க்கப்படக்கூடிய தவறுகள், ஆனால், இது அவரது அரசியல் பிம்பத்திற்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. புத்துணர்ச்சியையும் தொழில்முறை அணுகுமுறையையும் முன்வைக்கும் ஒரு கட்சிக்கு, இத்தகைய ஆரம்பக்காலத் தடுமாற்றங்கள் அபாயகரமானவை. ஆனால், அரசியல், சினிமா போல, மீண்டும் எழுவதையே விரும்புகிறது – மேலும் விஜய் இன்னும் மக்களின் கவனத்தை தன்வசம் வைத்துள்ளார்.
களம் மாறியுள்ளது: கூட்டணிகளும் அணி மாற்றங்களும்
TVK யின் வருகைக்குப் பிறகு அரசியல் களம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளது. அ.தி.மு.க. தனது கௌரவத்தை விட்டுக்கொடுத்து, எடப்பாடி பழனிசாமியின் ஆரம்பகாலத்தில், கடும் எதிர்ப்பையும் மீறி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. இது அ.தி.மு.க.வினரிடையே குழப்பத்தையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தனித்து நிற்க முடியாத பா.ஜ.க., தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அ.தி.மு.க.வுடன் ஒட்டிக்கொண்டுள்ளது. தி.மு.க. ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையை எதிர்கொண்டாலும், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. வியப்பாக, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தி.மு.க.வுக்குச் சாதகமாக அமையலாம் – இது TVK யை அ.தி.மு.க.விலிருந்து பிரித்து, தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை மேலும் சிதறடிக்கும்.
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு உள்ள அதிருப்தி, விஜய்க்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன், TVK யுடன் கூட்டணி சேர பரிசீலிப்பதாகவும் – குறிப்பாக கண்ணியமான தொகுதிப் பங்கீடு மற்றும் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டால் – கிசுகிசுக்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஒரு நகர்வு TVK யின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அதன் சமூக தளத்தையும் விரிவுபடுத்தும்.
TVK மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான போட்டி
நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ் உணர்வு மற்றும் போராட்டத்தின் குரலாக உருவெடுத்திருந்த பகுதிகளில், TVK இப்போது அந்த உணர்வுபூர்வமான வாக்காளர் தளத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. விஜய் தனது கவர்ச்சியையும், வெற்றி பெறக்கூடிய வாய்ப்பையும் கொண்டு வருவதால், சீமானை ஒரு துணிச்சலான நபர் எனக் கருதிய பல இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் இப்போது, TVK யை “மாற்றாகக்’ கருதுகின்றனர். இந்த மாற்றம், குறிப்பாக நகர்ப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புற வாக்காளர்களிடையே NTK யின் வாக்கு சதவீதத்தை கணிசமாகப் பாதிக்கலாம்.
26% வாக்கு பங்கு: இன்னும் அடையக்கூடிய இலக்கா?
சில மாதங்களுக்கு முன்பு, TVK 26% வரை வாக்குகளைப் பெறக்கூடும் என கணிப்புகள் தெரிவித்தன. அந்த எண்ணிக்கை இன்னும் அடையக் கூடிய தூரத்தில்தான் உள்ளது – ஆனால் அது ஒரு பெரிய கேள்வியைச் சார்ந்துள்ளது: TVK அரசியல் ரீதியாக புத்திசாலித்தனமாக செயல்படுமா, அல்லது வெறும் ஆரவாரத்தில் சிக்கி 10-12% வாக்குகளுடன் திருப்தி அடையுமா? விஜய் Momentum-ஐ பெற்றுள்ளார். ஆனால், momentum ஒரு இயக்கமாக மாற மேலாண்மை அவசியம். சரியான வியூகம், தெளிவான பார்வை, புத்திசாலித்தனமான கூட்டணிகள், மற்றும் கள அளவிலான ஈடுபாடு இருந்தால் – 26% என்பது ஆரம்ப அளவாக இருக்கலாம், உச்சவரம்பு அல்ல.
முடிவுரை: அரசியல் சந்திப்புப் புள்ளி விஜய்யின் அரசியல் பயணம் இனி சினிமாவை பற்றியது அல்ல. அது ஆக்ரோஷம், புத்திசாலித்தனம், மற்றும் திறமை பற்றியது. சரியான குழுவை உருவாக்கி, ஒரு தெளிவான கொள்கை நிலையை வரையறுத்து, நீண்டகால கண்ணோட்டத்துடன் செயல்பட்டால் – 2026 – இல் அவரது அரசியல் எண்ட்ரி, வலிமையான சக்தியுடன் கூடிய அறிமுகமாகவும் இருக்கலாம். களம் தயாராகிவிட்டது. வாக்காளர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.