நாடு முழுவதும் தெருநாய்களின் தாக்குதல்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தொடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அந்த விசாரணையின் போது, இனி டெல்லியில் தெருநாய்கள் இருக்கக்கூடாது என நீதிபதிகள் கடும் உத்தரவைப் பிறப்பித்தனர். இந்த உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கும், நாய்கள் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
‘நீயா நானா’ நிகழ்ச்சியில் காரசார விவாதம்
இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ விவாத நிகழ்ச்சி, இந்த விவகாரத்தை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளது. ‘தெருநாய்கள் இல்லாத நகரம் வேண்டும்’ VS ‘தெருநாய்க்கும் நகரத்தில் உரிமை உள்ளது’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறமும், நாய்கள் ஆதரவாளர்கள் மறுபுறமும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். நாய்க்கடியால் தங்கள் குழந்தைகளையும், உறவினர்களையும் இழந்த பெற்றோர்கள் கண்ணீர்மல்க தங்கள் சோகமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் மகனை இழந்த தந்தை, நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டும் இரண்டு மாதங்கள் கழித்து உயிரை இழந்தவரின் குடும்பத்தினர் எனப் பாதிக்கப்பட்டவர்களின் வலி, பார்வையாளர்களை உலுக்கியது.
நாய் ஆதரவாளர்களின் வாதங்கள்
மறுபுறம், நாய்கள் ஆதரவாளர்கள், “எல்லா நாய்களும் கடிக்காது, நீங்கள் அவற்றை சீண்டினால் மட்டுமே கடிக்கும். இரவு 9 மணிக்கு மேல் சம்பந்தமில்லாத இடங்களுக்கு ஏன் செல்கிறீர்கள்?” போன்ற கேள்விகளை எழுப்பினர். மேலும், “ஒரு குழந்தையால் விபத்து ஏற்பட்டால் குழந்தைகளை ஒழித்துவிடுவோமா?” என்று அதிர்ச்சி தரும் கேள்விகளையும் முன்வைத்தனர். இந்த வாதங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சியில் பார்த்த பார்வையாளர்களையும் ஆத்திரமடையச் செய்தது.
கோபிநாத்தின் கூர்மையான கேள்விகள்
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத், “நான் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்று நாய் எப்படி முடிவு செய்ய முடியும்? பணக்காரர்கள் வசிக்கும் தெருக்களில் ஏன் தெருநாய்கள் இல்லை? பாதிக்கப்பட்ட நாங்கள் தானே நாய் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும், பாதிக்கப்படாத நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்?” என்று நாய் ஆதரவாளர்களை நோக்கி கூர்மையான கேள்விகளை முன்வைத்தார்.
சூழல் ஆர்வலரின் புதிய பார்வை
ஒரு சூழல் ஆர்வலர், நாய் ஆதரவாளர்கள் அதிக அளவில் உணவு வைப்பதால் தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, அவை ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும், இதுவே குழந்தைகள் மற்றும் பாதசாரிகளைத் துரத்திக் கடிக்கக் காரணம் என்றும் விளக்கினார். மேலும், நாய்க்கழிவுகளால் ரேபிஸ் தவிர வேறு பல நோய்களும் பரவுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர், சமூக வலைதளங்களில் தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு எதிராகப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “தெருநாய்களை விட அதற்கு ஆதரவு அளிக்கும் ‘நாய் காதலர்கள்’ தான் ஆபத்தானவர்கள்” எனப் பல நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தெருநாய்கள் குறித்த இந்த விவாதம் இணையத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.