தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக வெளிநாட்டு மொழி கற்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் படி பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் பாரே (Ms. Lise Talbot Barre Consul General) ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்தத் திட்டமானது முதற்கட்டமாக மார்க்கெட் தெரு-சென்னை மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை -சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்-சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் பட்டேல் நகர்-சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என 4 பிரிவுகளுக்கு விருப்பப் பாடமாக பிரெஞ்சு மொழி கற்றல் வகுப்புகள் முன்னோடித் திட்டமாக தொடங்கப்படவுள்ளது.

மாணவர்கள் ஜூனியர் லெவல் A2 வரை கற்பதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது. இது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்வி வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பிரெஞ்சு மொழி கற்பிக்க மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here