கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: அண்ணாமலை, அ.தி.மு.க.,வை குறை சொல்லி திட்டமிட்டு பேசி உள்ளார். விக்கிரவாண்டியில் அ.தி.மு.க., போட்டியிட்டு இருந்தால் 3வது, 4வது இடம் பிடிக்கும் எனக்கூறியுள்ளார். அவர் மெத்த படித்தவர். மிகப்பெரிய அரசியல் ஞானி. அவரது கணிப்பு அப்படி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்படி நடந்தது என்பது பற்றி நாடே அறியும். அது அண்ணாமலைக்கும் தெரியும். ஏதோ அண்ணாமலை வந்த பிறகு தான் பா.ஜ., வளர்ந்துள்ளதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். 2014 லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க., வேட்பாளரை விட 42 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றார். தற்போது, தி.மு.க., வேட்பாளரை விட ஒரு லட்சத்திற்கும் மேல் குறைவான ஓட்டுகளை அண்ணாமலை பெற்றுள்ளார். பிறகு எப்படி பாஜ., வளர்ந்துள்ளது என்கின்றனர். 0.52 சதவீத குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளனர்.
அண்ணாமலை தினமும் பேட்டி கொடுக்கிறார். பேட்டி மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். பா.ஜ., தலைவராக இருந்து தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை மத்திய அரசிடம் பெற்று கொடுத்தார். வாயில் வடைசுட்டு கொண்டுள்ளார். எப்போது பார்த்தாலும் பொய் பேசுகிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கோவையில் பொய் சொல்லிதான் ஓட்டு பெற்றார். உண்மை சொல்லி பெறவில்லை. மத்தியில் பாஜ., ஆட்சி அமைத்துள்ளதால், 100 நாளில் நிறைவேற்றுவேன் என முன்னர் கூறிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றுவாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படிப்பட்டவர் தலைவராக இருப்பதால் தான் 300க்கு மேல் தொகுதிகளை பெற்ற பா.ஜ., தற்போது தொகுதிகள் குறைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.