பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட அதிமுக திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் இந்த கொலையில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த கொலையில் அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த நபர்களுக்கும் தொடர்ப இருப்பதாக தெரியவந்தது. இதில் குறிப்பாக அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர் கொடி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, திருமதி மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here