தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார். அடுத்த மாதம் 14ம் தேதி முதல்வர் சென்னை திரும்புகிறார். அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளார்.
இந்நிலையில், கட்சி உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்:
மக்களிடம் நற்சான்றிதழை பெற அமைச்சரவை கூட்டத்திலும், மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன், எனவும் செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள். கடல் கடந்து சென்றாலும், கவனம் எல்லாம் தமிழகத்தின் மீது தான் இருக்கும்.
விமர்சனம், விவாதம் செய்பவருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்கள் பதில்களாக அமையட்டும். ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். தமிழகம் சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
மேலும், அயல்நாடு சென்றாலும், தமிழகத்தில் எந்த ஒரு பணியும் தடைபடாமல் நடைபெற வேண்டும்.பயணத்தின் நோக்கம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பது தான். அரசு நிர்வாகம் தொய்வின்றி தொடர அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வலியுறுத்துகிறேன். ஆட்சிப்பணி, கட்சிப் பணிகளை ஒருங்கிணைந்து கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.