இந்திய பெரும் பணக்காரர்களில் முதன்மையானவராக அதானியின், அதானி குழுமம் யுபிஐ ஆன்லைன் பண பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பின்டெக் துறையில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சூட்டோடு சூடாக யுபிஐ பரிவர்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேடிஎம் செயலி நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (மே 28) அகமதாபாத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒன் 97 நிறுவனத்தின் சுமார் ரூ. 4,218 கோடி மதிப்புடைய 19% சதவீத பங்குகள் சேகர் சர்மா வசம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளதால் அதை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் பேடிஎம் உருவாக்கி வைத்துள்ள வலுவான கட்டமைப்பை பின்டெக் துறையில் நுழைவதற்கான கச்சிதமான வழியாக அதானி குழுமம் கருதுகிறது.

ஒன் 97 பங்குகளை அதானி வாங்கும் பட்சத்தில் இந்தியாவில் பின்டெக் துறையில் வலுவாக காலூன்றியுள்ள கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபோன் பே மற்றும் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அதானி குழுமம் உருவெடுக்கக்கூடும்.

இதற்கிடையில், பங்குகளை விற்க எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புவதாக பேடிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் பின்டெக் துறையின் மீது அதானி காட்டத் தொடங்கியிருக்கும் இந்த ஆர்வம் வரும் காலங்களில் இந்தியாவில் பின்டெக் துறையில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது வெளிச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here