சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தை நாளை முதல் பொதுமக்கள் சுற்றிப்பார்க்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருங்காட்சியகத்தை பார்வையிட அரசின் இணைய முகவரியில் முன்கூட்டியே அனுமதிச் சீட்டு பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக் கடற்கரையில் அண்ணா, கலைஞர் ஆகிய இருவரது நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் அண்ணா அவர்களின் சிலையும்,வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்துள்ளன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது. அதேபோல் கலைஞர் சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் அருமையான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள கருணாநிதியின் எழிலோவியங்கள் எனும் அறையில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள் அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் அமைந்துள்ளன. அடுத்ததாக அதே அருங்காட்சியகத்தில் “உரிமைப் போராளி கலைஞர்” என்ற அறையில், மாநில உரிமைகளுக்காக கருணாநிதி முன்னெடுத்த முயற்சிகள் குறித்த தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. கருணாநிதியின் படைப்புகளான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்களில் ஒவ்வொன்றின் மீதும் கை வைத்தால் அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி எடுத்து உரைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதி அருங்காட்சியகத்தில் ரயிலில் பயணித்த அனுபவத்தோடு பார்க்கு வகையில் “சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” தலைப்பில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கருணாநிதி வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.
கருணாநிதி நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்துக்கு செல்பவர்களுக்கு நினைவிலிருந்து நீங்காத வகையில் புதிய அனுபவத்தை தரும் வகையில் கட்டிட வேலைபாடுகள் கலை நுணுக்கங்களுடன்
அமைக்கப்பட்டுள்ளன.