ஹாட் ஸ்பாட் 2 மச் – சினிமா விமர்சனம்

Priya
24 Views
2 Min Read

முதல் பாகத்தின் பாதையைத் தொடர்ந்து, இன்னும் விரிவான சமூகக் கேள்விகளை முன்வைக்கும் முயற்சியாக வெளியாகியுள்ளது, ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’.

இந்தப் படத்தில் மூன்று முக்கியக் கதைகள் இடம்பெறுகின்றன. அவற்றை இணைக்கும் ஒரு பொதுவான விஷயமும் உள்ளது. கடந்த பாகத்தைப் போலவே, கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்வதுபோல எடுத்துள்ளனர். முதல் பாகத்தில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதில், அந்தக் கதாபாத்திரத்தை பிரியா பவானி சங்கர் ஏற்றுள்ளார்.

முதல் கதை, சினிமா நட்சத்திரங்களின் மீது அளவுக்கு மீறிய ரசிகத்தனத்தில் மூழ்கும் இளைஞர்களை மையமாகக் கொண்டது. அந்த ரசிகத்தனம் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை, அதையே அனுபவித்த எம்.எஸ்.பாஸ்கர் மூலம் படம் சொல்கிறது.

இரண்டாவது கதை, ஆடை சுதந்திரம் குறித்தது. இளைய தலைமுறையின் பார்வையும், மூத்த தலைமுறையின் எண்ணங்களும் எங்கே மோதுகின்றன என்பதை தம்பி ராமையாவின் பாத்திரம் வழியாக படம் பேசுகிறது.

மூன்றாவது கதை, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு வித்தியாசமான காதல் கோணத்தை முன்வைக்கிறது.

இந்த மூன்று கதைகளுக்குள்ளும் லெஸ்பியன், கள்ளக்காதல் போன்ற இதுவரை பெரிதாக பேசப்படாத அம்சங்களையும் சேர்த்து, சாதாரணமாகத் தோன்றும் கதைகளுக்கு கூடுதல் அடர்த்தியை வழங்குகிறார் விக்னேஷ் கார்த்திக். இதுவே ‘2 மச்’ என்ற தலைப்புக்குப் பொருத்தமான விளக்கமாகிறது.

பிரியா பவானி சங்கர், பவானிஸ்ரீ, அஸ்வின், ஆதித்யா பாஸ்கர் என எல்லாருமே தங்களுடை கேரக்டரை சிறப்பாகச் செய்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா இருவரும் அனுபவம் நிறைந்த நடிப்பால் கதைகளுக்கு வலு சேர்க்கிறார்கள்.

ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால் ஒளிப்பதிவு, உறுத்தா வண்ணம் காட்சிகளுடன் ஒன்றச் செய்கிறது. சதிஷ் ரகுநாதனின் பின்னணி இசை, படத்துக்கு பலமாக இருக்கிறது.

முதல் பாகத்தில் இருந்த வேகம் இதில் சற்றுக் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு கதையிலும் கூறியுள்ள சமூகக் கருத்துகள், நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால், சொல்ல வந்ததை இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்லியிருக்கலாம். கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களை பார்வையாளர்களிடமே விட்டிருப்பது, நல்ல ஐடியா.

Share This Article
Leave a Comment

Leave a Reply