பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வரும் தலைமைப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சியின் பெயர், கொடி மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பிற்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தந்தை – மகன் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அன்புமணியைப் பாமக தலைவராக அங்கீகரித்ததை எதிர்த்து ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு நடைபெற்ற விசாரணையில், கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து உரிய உரிமையியல் நீதிமன்றத்தை (Civil Court) அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ராமதாஸ் தனது மனுவில், “அன்புமணி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பாமகவைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும், கட்சியின் உண்மையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்காக இதுவரை ராமதாஸ் தரப்பில் 4,109 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார். “அன்புமணி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்; அவர் பாமக தலைவர் எனச் சொல்லிக் கொள்வது நீதிமன்ற அவமதிப்பு” என்றும் அவர் சாடியுள்ளார். இந்த சட்டப் போராட்டம் காரணமாக, பாமகவின் ‘மாம்பழம்’ சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுவது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

